- எழுதியவர், ஜுகல் புரோஹித் மற்றும் டெப்லீன் ராய்
- பதவி, டாக்கா, வங்கதேசம்
வங்கதேசத்தை சேர்ந்த மிர் மஹ்ஃபூஸ் உர் ரஹ்மான் என்ற இளைஞர் ஜூலை 18 அன்று மதியம் தனது வீட்டை விட்டு வெளியேறினார். அவர் நண்பர்களுடன் டாக்காவில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மஹ்ஃபூஸ் அதுவரை நேரில் சென்று போராட்டத்தில் பங்கேற்றதில்லை. ஜூலை 18 அன்று தான் முதன்முதலில் போராட்டத்துக்கு சென்றார். மிரின் குடும்பத்தினர் அவரை 'முக்தோ' என்று செல்லமாக அழைத்தனர்.
போராட்டத்துக்கு சென்ற அந்த மதியத்திற்கு பிறகு, முக்தோ தனது வீட்டையும் குடும்பத்தையும் மீண்டும் பார்க்க முடியவில்லை. ஆனால் அவரது வீடியோ பதிவு ஒன்று அன்று இணையத்தில் வைரலானது.
வீடியோ பதிவில் அவர் தண்ணீர் பாட்டில்களை ஒரு பையில் கட்டிக்கொண்டு தெருவில் நடந்து செல்வது பதிவாகியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற மக்களிடம் சென்று தண்ணீர் வேண்டுமா? என்று திரும்பத்திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் நடந்து சென்ற அந்த தெருவில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சில நிமிடங்களில், முக்தோ தலையில் சுடப்பட்டு இறந்தார். 25 வயதான முக்தோ முதுகலை படித்துக் கொண்டிருந்தார். படிப்புடன் பகுதி நேர வேலையையும் செய்து வந்தார். இதன் மூலம் மாதந்தோறும் ஓரளவு வருமானம் கிடைத்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரது சகோதரர் மிர் மஹ்மூத் உர் ரஹ்மான் என்ற டிப்டோ (30 வயது) கூறுகையில், "முக்தோ அரசு வேலைக்கு காத்திருந்த இளைஞர் அல்ல. ஆனால், வருங்கால சந்ததியினருக்கு நீதி கிடைக்க போராட்டத்தில் பங்கேற்க சென்றவர்" என்றார்.
வங்கதேசத்தில் பல வாரங்கள் நீடித்த போராட்டங்களில் முக்தோ போன்ற பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சாதாரண குடிமக்களும் வன்முறையின் பிடியில் சிக்கினர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 11 வரை நடந்த வன்முறையில் 600 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
ஃபார்முலா 4: இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளி கார் ரேசர் சேத்தன் கொரடா கூறுவது என்ன?
கும்பகோணத்தில் விற்கப்பட்ட காண்டாமிருக கொம்பு - நாடகமாடிப் பிடித்த வனத்துறையின் சிறப்புக் குழு
வன்முறைப் போராட்டங்களும், அதிகரித்த பொது அதிருப்தியும் வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுத்தது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக நேரிட்டது. அதன் பிறகு வங்கதேசத்தில் இருந்து தப்பி ஷேக் ஹசீனா பாதுகாப்பான இடம் தேடி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.
வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் தற்போது புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
நாட்டை வழிநடத்துவது யார்? சாலைகள், பொது இடங்களில் போலீசார் இல்லாத நிலையில் சட்டம் ஒழுங்கு எப்படி பராமரிக்கப்படும்? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு மாணவர் தலைவர்கள் விடை காண முயல்கின்றனர்.
யார் இந்த மாணவர் தலைவர்கள்?
வங்கதேசத்துடன் இந்தியா நட்புறவு கொண்டுள்ளது. இந்த உறவுக்கு ஒரு வரலாற்று பின்னணி உண்டு. இரு நாடுகளும் 4,000 கிலோமீட்டருக்கும் அதிகமான எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
இந்தியாவுடனான உறவுகளைப் பற்றி வங்கதேச மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்? சிலர் இந்தியாவின் பங்கைக் கேள்வி கேட்பது ஏன்?
டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நுஸ்ரத் தபஸ்ஸூமை சந்தித்தோம்.
போராட்டங்களுக்கு முன்பு, அவர் கல்லூரியில் பொது மாணவர் தலைவராக இருந்தார். ஆனால் இன்று முழு வங்கதேசமும் அவரை அறிந்திருக்கிறது.
சில மாணவர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க விரும்புகின்றனர். சில மாணவர்கள் அவரை தங்கள் பெற்றோருடன் சந்திக்க விரும்பினர்.
இடைக்கால அரசாங்கம் வந்த பிறகு நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டேன்.
அவர் கூறுகையில், "இப்போது எனக்கு ஒரே ஒரு குறிக்கோள் உள்ளது, அது என் நாட்டை சுதந்திரமாகவும், வளமாகவும் மாற்ற வேண்டும்."
நுஸ்ரத் கூறுகையில், "என்னைப் பற்றிய எனது கனவுகளை நான் தள்ளி வைத்துவிட்டேன். எனது நாட்டிற்கு தீவிரமான மாற்றம் தேவை. இந்த மாற்றம் ஒவ்வொரு துறையிலும் கொண்டு வரப்பட வேண்டும்." என்கிறார்.
ஆனால், அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது நாட்டு மக்களைப் பொறுத்தே அமையும், மக்கள் ஆதரவு அளித்தால் விரைவில் இந்தப் பணியை முடிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
நுஸ்ரத் அரசியல் அறிவியலில் (Political Science) முதுகலை படித்து வருகிறார். அவரது நண்பர்கள் சிலர் இடைக்கால அரசில் பல்வேறு பதவிகளை வகிக்கின்றனர்.
இடைக்கால அரசு எதிர்கொள்ளும் கேள்விகள்
வங்கதேசத்தில் அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் தொடங்கின. ஆனால், பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையும், இந்தப் போராட்டங்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் எடுத்த நிலைப்பாடும் வங்கதேசத்தின் நிலைமையை மேலும் மோசமாக்கியது.
போராட்டங்கள் வன்முறையாக மாறியது. பின்னர் அவர்கள் ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். அதனால்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த போராட்டங்களில் எதிர்க்கட்சிகளும் பங்கு வகித்தன.
ஜோபிடா நஸ்ரீன் டாக்கா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர் கூறுகையில், "ஆரம்ப காலங்களில், இந்த போராட்டங்களில் பெரும்பாலான மாணவர்கள் டாக்கா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இடதுசாரி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்.
"ஆனால் பின்னர் இந்த போராட்டங்கள் நாடு முழுவதும் பரவிய போது, பல்வேறு சித்தாந்தங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களில் கலந்து கொண்டனர்."
"ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தை எதிர்க்கும் வலதுசாரி அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளும் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன."
தற்போது வங்கதேசத்தின் அதிகாரம் இடைக்கால அரசாங்கத்தின் வசம் உள்ளது. தற்காலிக அரசாங்கத்தை உருவாக்குவதில் மாணவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
ஷேக் ஹசீனாவின் அரசு போய், இடைக்கால அரசு வந்தாலும், இந்த இடைக்கால அரசு எதிர்கொள்ளும் கேள்விகள், பிரச்னைகள் ஏராளம். வங்கதேசத்தில் எப்போது தேர்தல் நடைபெறும்? தொடரும் வன்முறை எப்போது நிறுத்தப்படும்? நாட்டில் சிறுபான்மையினர் எப்போது பாதுகாப்பாக உணர்வார்கள்? என்பன போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
வங்கதேசத்தில் வன்முறையை பொறுத்து கொள்ள மாட்டோம் என்று இடைக்கால அரசு பலமுறை கூறி விட்டது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று இடைக்கால அரசு தெரிவித்தது.
ஸ்ரீஜேஷ்: இந்தியாவின் சுவர் என்றழைக்கப்பட்ட ஹாக்கி ஜாம்பவானின் சாதனைப் பயணம்
மலேசியாவில் 26 அடி குழிக்குள் விழுந்த இந்திய பெண் - சுற்றுலா சென்ற இடத்தில் என்ன நடந்தது?
தற்போதைய நிலை என்ன?
தற்போது வங்கதேசத்தில் மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக நிற்காதவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வங்கதேச ஊடகங்களில் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளியாகி உள்ளன.
பேராசிரியர் ஜோபைடா கூறுகையில், "மற்ற பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் பேராசிரியர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மாணவர் இயக்கத்தை ஆதரிக்காததற்காக அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இப்போது அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சிலர் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது."
ஆனால், நுஸ்ரத்தின் கூற்றுப்படி, "இப்போது நடக்கும் எதிர்ப்பு, கடந்த 16 ஆண்டுகளாக வங்கதேசத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிரானது. சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே கோபம் உள்ளது," என்று அவர் கூறுகிறார்.
"சமூகம் படிப்படியாக மாறும், மேம்படும் என்று நான் நினைக்கிறேன். மாணவர்கள் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்துவார்கள், நிலைமை கட்டுக்குள் வரும்" என்று அவர் மேலும் கூறினார்.
வங்கதேசத்தின் சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக இந்து சமூகத்தினர் பெரும்பாலும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்கள். இருப்பினும், ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிரான போராட்டங்களில் வங்கதேசத்தின் இந்து சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றதையும் நாங்கள் பார்த்தோம்.
சஜ்ஜல் குமார் பிரமானிக் கணக்கியல் மற்றும் தகவல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
இடைக்கால அரசு பற்றிய மாணவர்களின் கருத்து
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகங்களை பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். நிச்சயமாக அவரது ஆட்சிக் காலத்தில் கலவரங்கள் நடந்தன. ” என்று சஜ்ஜல் குமார் கூறுகிறார்.
கொரோனா நெருக்கடிக்குப் பிறகு, வங்கதேசத்தில் பொருளாதார பிரச்னைகள் எழுந்தன. வங்கதேசத்தின் பொருளாதாரம் முன்பு போல் வேகமாக விரிவடையவில்லை. வங்கதேசத்தின் பணவீக்க விகிதம் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக அதிகரித்து வருவதாக தற்போதைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தின் தற்போதைய சூழ்நிலை சஜ்ஜல் போன்ற இளைஞர்களை தங்கள் எதிர்காலம் குறித்து கவலை கொள்ள வைத்துள்ளது.
"வேலை தேடும் போது பல சிரமங்களை எதிர்கொண்டனர். தேர்வுக்கு முன்பே வினாத்தாள்கள் கசிந்தன. இதன் விளைவாக, இந்த காரணிகள் அனைத்தும் அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி மற்றும் கோபத்தை அதிகரிக்க வழிவகுத்தது."என்கிறார் அவர்.
தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?
நுஸ்ரத்தை போலவே நஜிபா ஜன்னத்தும் மாணவர் தலைவர். வங்கதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் நடந்த போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கினார்.
"புதிய அரசாங்கம் (இடைக்கால அரசு) முதலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் தொடர்பு கொள்ள வேண்டும். இருப்பினும், இதுவரை அப்படி எதுவும் நடப்பதை நான் பார்க்கவில்லை. ஒருவேளை அரசாங்கம் தீர்வு காண நேரம் எடுக்கும்" என்று அவர் கூறினார்.
விரதம் இருந்துவிட்டு வடை, சிப்ஸ் மற்றும் இனிப்புகளை சாப்பிடலாமா?
டைட்டானிக்கில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் எப்படி உள்ளன?- அவை ரகசிய இடத்தில் ஏன் வைக்கப்பட்டுள்ளன?
இந்தியா மீது அதிருப்தியில் மாணவர்கள்
மாணவி அனிகா ஷர்மிளா "அதிக பாதுகாப்பு, தெருக்களில், பொது இடங்களில் பாதுகாப்பான சூழல் இருக்க வேண்டும். பெண்கள் அலுவலகங்களிலும் பாதுகாப்பு இருக்க வேண்டும்" என்றார்.
முஃப்சிம் அல்வி அனிகாவின் நண்பர். அவர் பேசுகையில், "நம் நாட்டில் சிறுபான்மை சமுதாய மக்கள் எதிர்கொள்ளும் சூழல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. அவர்களுக்கு என்ன நடக்கிறது. வருத்தமாக இருக்கிறது. குறிப்பாக இந்து மக்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது" என்றார்.
வங்கதேசத்தில் எப்போது தேர்தல் நடைபெறும்? மாணவர்களிடமும் கேட்டோம்.
கலைஞர் என்று நமக்கு அறிமுகமான அபிஜித் கர்மோகர், பல வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர். அவர் கூறுகையில், "ஆமாம்! தேர்தல் வரும். ஆனால் சில காலம் கழித்து தேர்தல் நடந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்றார்.
ஃபைஸ் ஹைரூஸ் என்ற மாணவர். "அடுத்த மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெறுவதை நான் விரும்பவில்லை. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.
ஷேக் ஹசீனா அரசுக்கும் இந்தியாவுக்கும் நட்பு மற்றும் நல்லுறவு இருந்தது. ஆகஸ்ட் 5ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
நிச்சயமாக, வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசாங்கத்துடன் நல்லுறவை பேணவே இந்தியாவும் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோதியே இவ்வாறு கூறியுள்ளார்.
ஆனால் நுஸ்ரத்தின் கூற்றுப்படி, "நாம் ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது என்றால், இந்தியாவும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் இதுவரை கடைபிடித்து வந்த கொள்கை சரியில்லை. ஏனெனில் ஒரு நாடு எந்த கட்சிக்கும் அல்லது குடும்பத்திற்கும் சொந்தமானது அல்ல."
"ஒரு சிறிய குழுவுடன் நல்லுறவை பேணி, அந்தக் குழுவின் ஒவ்வொரு தவறையும் புறக்கணித்து அவர்களை ஊக்குவிக்க முடியும் என்று இந்தியா நினைக்கிறது. இந்தியா போன்ற ஒரு நல்ல தேசத்திலிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை." என்று அவர் கூறுகிறார்.
தமிழரசன் நினைவு தினம்: விடுதலை படம் நினைவூட்டும் இடதுசாரி அரசியல்வாதி - யார் இவர்?
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது - திட்டமிட்டதை விட தாமதமாக என்ன காரணம்?
முக்தோ குடும்பத்தின் நிலை
முக்தோவின் குடும்பம் சோகத்தில் இருந்து மீள முயற்சிக்கிறது.
முக்தோவின் இரட்டையர் சகோதரர் மிர் ரஹ்மான் என்கிற டிப்டோவிடம் நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன், வங்கதேசம் முக்தோவை எப்படி நினைவில் கொள்ள வேண்டும்?
"அவரது தியாகத்தை மக்கள் எப்போதும் நினைவுகூர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் தனது நாட்டின் மீது பேரார்வம் கொண்டிருந்தார். அவர் எப்போதும் தனது நாட்டுக்கு சேவை செய்ய விரும்பினார். அவர் விமானப்படையில் விமானியாக இணைந்து வங்கதேசத்துக்கு சேவை செய்ய விரும்பினார்."
"அதற்காக அவர் இரண்டு முறை முயற்சி செய்தார், ஆனால் அவர் வெற்றி பெறவில்லை, ஆனால் இறுதியில் அவர் தனது நாட்டுக்கு சேவை செய்து உயிரிழந்தார் என்று சொல்லலாம்"
"எதிர்காலத்தில் மக்கள் அவரை மறந்துவிடலாம். ஆனால் கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கும் போது, எனக்கு அவரது நினைவு வரும். ஏனென்றால் எங்கள் இருவருக்கும் ஒரே முகம்" என்கிறார் மிர் ரஹ்மான்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)